தொடர்ச்சியான கல்லூரி நாட்களில்
துவண்டு கிடந்தவளுக்கு
துள்ளிக்குதிக்கும் விதமாய்
அறிமுகப்படுத்திக் கொண்டதந்த கோடை விடுமுறை!
கோடையில் வாடிய மலர்-திடீர்
அடைமழையில் ஆடி மகிழ்ந்திருக்க
மழைக்குப்பின் வீசும் வசந்தத்தில் சிலாகித்திருப்பது
கோடியழகல்லவா?
அப்படியே அமைந்ததந்த
விடுமுறை அறிவிப்பின்பின்
தொடங்கிய தனித்த தொடர்வண்டி பயணம்!
துணைக்கொரு புத்தகத்தை தோள்பைக்குள் திணித்துக் கொண்டேன்!
பரபரப்பான ரயில்நிலையம்!
தேவையைத் தேடியோடும் மனிதர்கள்!
தனிப்பறவையாய் நான்!
வாழ்க்கையின் விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்துவொரு
ஜன்னலோர இருக்கைக்குள்
தஞ்சமடைந்து கொண்டேன்!
தொடர்வண்டியிடம் மட்டுமே- என்னால்
மனம் விட்டு கதற முடிகிறது!
அவை என்னை என்றுமே அரவணைத்துச் செல்வதுபோல் தோன்றுமெனக்கு!
என்மீது மிகுந்த அக்கறை கொள்பவர்களுக்கெல்லாம்
கிளம்பிவிட்ட செய்தியை காதுக்குள் செலுத்திவிட்டு
கால்நீட்டி, கண்மூடி அமர்ந்து கொள்கிறேன்!
வாழ்வின் ஒட்டுமொத்த கசப்பும் கண்வழியே எட்டிப்பார்க்கின்றன!
ஏதோவொரு இருட்டில்
கதறிக்கிடக்கும் மனதை
தூண்டிலிட்டு கலைத்து விடுகிறது- ஒரு மனம்!
முகர்கிறேன்!
நுரையீரலின் அடிமட்டம் வரை மூச்சிழுக்கிறேன்!
இந்த ஊர்வந்து முதலில் குமட்டத் துவங்கி பின் பழகிப்போன கருவாட்டுவாசம்!
கண்திறந்து என் கண்ணோரக் கசப்பை
துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்கிறேன்!
இரண்டு ஜோடிக் கண்கள்
என்னைப் பார்த்து சிரிக்கின்றன!
தமிழ் பெண்களின் ஒட்டுமொத்த அழகையும் அள்ளி அளிக்கிறதந்த இரட்டைப் புன்னகை!
மனதின் ஓரத்தில் வாடிக்கிடந்த ஏதோவொன்று பற்றிப்படர்ந்து பாய்வதுபோலொரு உணர்வு!
எனக்கும் அதேபோல் சிரிக்க ஆசைதான்!
ஆனால் என் பெரிய பற்களின்மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்பதால்
பதிலுக்கு நானும் பல் தெரியாதவாறு புன்னகைத்துக் கொண்டேன்!
என்னைப்பற்றி விசாரித்துக் கொண்டும்
அவர்களைப்பற்றி விவரித்துக்கொண்டும்
பின் அவர்கள் இருவரும் கதைத்துக்கொண்டும்
பின் களைத்துபோய் அவர்கள் உறங்கிவிட
நான் மீண்டும் நினைவுகளுக்குள் புதைந்து கொள்கிறேன்!!
பலபல மனிதர்களையும், மனங்களையும், குரல்களையும், குதூகலங்களையும், நினைவுகளையும், கண்ணீரையும், இழுத்தவாறு நகர்கிறதிந்த தொடர்வண்டி❣
Beautiful poem!
LikeLiked by 1 person